அமெரிக்காவுக்கு வருகை தருகையில், நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இந்திய பிரதமர் உரை நிகழ்த்த வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
நீண்ட காலமாக அமெரிக்க விசா மறுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு, இந்தியப் பிரதமர் பதவி, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றும் கவுரவத்தை அளிக்கவிருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில், நரேந்திர மோடி அமெரிக்கா வரும்போது, அவரை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு விடுக்குமாறு அமெரிக்க பிரதிநிதள் சபை குடியரசுக் கட்சி அவைத் தலைவர் எட் ராய்ஸ் சபாநாயகர் ஜான் போனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை கடிதத்தில்: "மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு மிகவும் முக்கியமானது.
தெற்காசிய பிராந்தியத்தை பொருத்த வரை அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இந்தியா - அமெரிக்கா நல்லுறவு நீடிப்பது மிகவும் அவசியமானது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட்டு அமெரிக்கா இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2005-ல் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.