மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உட்பட 7 பேருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி, அவரது நண்பர்கள் 6 பேரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு லக்வி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தீவிரவாதிகள் இந்தியா வுக்குள் ஊடுருவ பயன்படுத்திய தாகக் கூறப்படும் படகு கராச்சி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு லக்வி உட்பட 6 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி நேற்று உத்தரவிட்டார். மேலும் பாகிஸ்தான் அரசும் பதில் மனு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.