லண்டன்: இந்திய வம்சாவளியும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான மொஹிந்தர் கே மிதா, லண்டன் கவுன்சிலின் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இவர் லண்டன் கவுன்சிலின் முதல் தலித் பெண் மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
செவ்வாயன்று நடந்த கூட்டத்தில், 2022-23-க்கான மேற்கு லண்டனின் மேயராக மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். மிதா 2,272 வாக்குகளுடன் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
மேயர் தேர்தல் பிரசாரத்தின்போது, கரோனாவிலிருந்து வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், கவுன்சில் செயல்பாட்டை வெளிப்படையாக மாற்றுதல் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்.
இதுகுறித்து தொழிலாளர் கட்சி தனது அறிக்கையில், “கவுன்சிலர் மொஹிந்தர் மிதா அடுத்த ஆண்டிற்கான லண்டன் கவுன்சில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லண்டனில் செயல்படும் அம்பேத்கர் - புத்த அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் தாஸ் கூறும்போது, “இங்கிலாந்தின் முதல் தலித் பெண் மேயர். இது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மொஹிந்தர் கே மிதா துணை மேயராக பதவி வகித்திருக்கிறார். மிதா மேயராக தேந்தெடுக்கப்பட்டுள்ளதை லண்டனில் உள்ள தலித் சமூகத்தினர் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.