டான்சானியாவில் உள்ள மன்யரா தேசியப் பூங்காவில் புகைப்படங்கள் எடுப்பதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 33 வயது கினா சென்றார். ‘‘ஏரி அருகே மரங்கள் நிறைய இருந்தன. அங்கே பெரிய சிங்கக் கூட்டம். பெரும்பாலும் பெண் சிங்கங்கள்தான். மகிழ்ச்சியாக அனைத்தும் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் படம் பிடிப்பதற்காக அங்கேயே நெடு நேரம் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சிங்கங்கள் ஒரு பெரிய மரத்தில் ஏறின. பல கிளைகளில் படுத்து, ஓய்வெடுக்க ஆரம்பித்தன. பொதுவாக சிங்கங்களுக்குப் பெரிய மரங்களில் ஏறும் வழக்கம் இல்லை. குட்டையான பட்டுப்போன மரங்களில் ஏறுவதுண்டு. இந்த அரியக் காட்சியைப் படம் பிடித்துத் தள்ளிவிட்டேன். கம்பீரமான விலங்குகள் கால்களையும் வாலையும் தொங்கப்போட்டுக்கொண்டு தூங்கிய காட்சி அத்தனை அழகாக இருந்தது! அடுத்தடுத்து 3 நாட்கள் சென்றபோதும் சிங்கங்களின் தரிசனம் இப்படியே கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்கிறார் கினா.
மரத்தில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!
சீனாவில் வசிக்கும் 24 வயது டெங் மெய், இளம் தொழிலதிபர். இவரது தொழில் துணி அலமாரிகளைச் சுத்தம் செய்து, அடுக்கிக் கொடுப்பதுதான். இவர் Obsessive Compulsive Disorder என்ற மனம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர். இப்படிப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்துகொண்டே இருந்தல் என்று செய்த வேலையையே செய்துகொண்டிருப்பார்கள். ஒரு ஃபேஷன் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வாடிக்கையாளர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் விருப்பப்பட்டால், துணி அலமாரியைச் சுத்தம் செய்து தருவதாகச் சொன்னார் டெங் மெய். அவருடைய வேலை நேர்த்தியைப் பார்த்தவர்கள், இதையே முழு நேரத் தொழிலாகச் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார்கள். ‘’எனக்கும் அந்த யோசனை நல்லதாகப்பட்டது. என் குறைபாட்டால், என் வீட்டிலேயே திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்துகொண்டிருப்பதைவிட, ஒவ்வொரு வீட்டிலும் இந்த வேலையைச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். குறைபாட்டை பணம் பெறும் வழியாக மாற்றியது போலவும் இருக்கும் என்று முடிவுசெய்தேன். வேலையை விட்டுவிட்டு, அலமாரியைச் சுத்தம் செய்து தரும் தொழிலை ஆரம்பித்தேன். எல்லோரும் இதெல்லாம் ஒரு தொழிலா என்று ஆச்சரியப்பட்டனர். ஏற்கெனவே எனக்குச் சில வாடிக்கையாளர்கள் இருந்ததால், அவர்கள் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். ஓராண்டில் 100 நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட்டேன். இவர்கள் எனக்குத் தொடர்ந்து, வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து விடுவார்கள். சுத்தம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டேன். அதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று உரை நிகழ்த்துகிறேன். என் வாழ்க்கை மிக நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய குறைபாட்டையே முதலீடாக வைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டேன்’’ என்கிறார் டெங் மெய்.
எல்லோரும் டெங் மெய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!