நியூயார்க்: 5 சதவீத போலி, ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை ட்விட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதாவது ட்விட்டரில் ஒருவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
ட்விட்டர் மற்றும் மஸ்க் தரப்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நிறுவனத்தை விற்க ட்விட்டர் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் விரும்பவில்லை. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து ட்விட்டர் மற்றும் மஸ்க் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. வெளியிடப்படாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் எலான் மஸ்க் மீது புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடியாக ட்விட்டர் நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்களை மஸ்க் முன் வைத்து வருகிறார்.
இதுதொடர்பாக மஸ்க் செய்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘20% போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள். ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு அதிகமாக இருக்கும். ட்விட்டரின் விவரங்கள் துல்லியமாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டே அந்த நிறுவனத்தை வாங்க நான் முன் வந்தேன். நேற்று ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பகிரங்கமாக 5 சதவீத ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பதாக கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரத்தைக் காட்ட மறுத்து விட்டார். இந்த ஆதாரத்தை அவர் காட்டும் வரை எனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது’’ எனக் கூறியுள்ளார்.
இதனிடையே 20% போலி பயனர்கள் அல்லது ஸ்பேம் கணக்குகளாக இருப்பதால் 44 பில்லியன் டாலர்கள் அதிகமாகத் தோன்றுவதாகவும், எலான் மஸ்க் ஒரு சிறந்த ட்விட்டர் ஒப்பந்தத்தை எதிர்பார்க்கக் கூடும் என்றும் டெஸ்லா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.