வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் குவித்தோரின் பெயர்கள் வெளியாகும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் ஹாலிவுட் நடிகை, ஹேரி பாட்டர் பட நாயகி எம்மா வாட்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
பிரிட்டனில் இருந்து செயல்படும் இண்டிபெண்டன்ட் இணையதளத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்மா வாட்சன் ஃபாலிங் லீவ்ஸ் ( Falling Leaves Ltd) என்ற பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் ஒரு நிறுவனத்தை தொடங்கியிதாகவும், அதன் வாயிலாக 2.8 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான வீடு ஒன்றை பிரிட்டன் தலைநகர் லண்டனில் அவர் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக இருக்கும் எம்மா வாட்சன், பனாமா நாட்டின் மொஸக் பொன்சேகா சட்ட நிறுவனம் வாயிலாக 2013-ம் ஆண்டு ஃபாலிங் லீவ்ஸ் நிறுவனத்தை துவக்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுக்கவில்லை:
எம்மா வாட்சன் வெளிநாட்டு நிறுவனம் மூலம் பிரிட்டனில் சொத்து வாங்கியதை மறுக்காத அவரது செய்தித் தொடர்பாளர், "தனிப்பட்ட சுதந்திரத்துக்காகவே எம்மா அவ்வாறாக வெளிநாட்டு நிறுவனம் மூலம் வீடு வாங்கினாரே தவிர அதன் மூலம் வரிச் சலுகை ஏதும் அவர் பெறவில்லை" என்றார்.