இலங்கையில் மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையின் 25 மாவட்டங்களில், 22 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது.
இதுவரை 3 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மழை வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இன்று (சனிக்கிழமை) வரை 71 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நிலச்சரிவுகள் ஏற்பட்ட நாளில் இருந்து, 127 பேர் காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பல்வேறு இடங்களில் 50 அடி உயரத்துக்கு இடிபாடுகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. அதில், சிக்கியிருப்பவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சுமார் 500 வீடுகள் முழுமையாகவும், 3,700 வீடுகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பொருட்சேதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தலைநகர் கொழும்பு உட்பட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வடிந்து வரும் நிலையில், தங்களது வசிப்பிடங்களுக்கு பலரும் திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
குவியும் சர்வதேச உதவிகள்
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளான இலங்கைக்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் குவிந்து வருகின்றன.
இந்தியா சார்பில் நேற்று ராணுவ விமானம் மூலம் அவசர தேவைக்கான நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் கொழும்பு நகருக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு கடற்படை கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.
படகுகள், வெள்ள மீட்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், படுக்கை விரிப்புகள், எமர்ஜென்சி லைட்டுகள், மருந்து பொருட்கள் மற்றும் மளிகை போன்றவை இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல் ஜப்பான் நாட்டில் இருந்தும் நேற்று விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொழும்பு வந்து சேர்ந்தன. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா சார்பில் நிதியுதவிகள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இன்று கொழும்பு நகரின் சில பகுதிகளில் மழை வெள்ளம் சற்று குறைந்திருந்தது. மழையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை என்பதால், களனி ஆற்றிலும் தண்ணீர் குறைந்து காணப்பட்டது.
எனினும், மற்ற இடங்களில் மழை நீடித்ததால், 24 மணி இடைவெளிக்குப் பின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், களனி கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடு திரும்பவில்லை.
மழை பாதிப்பு காரணமாக, இலங்கையில் விசாக திருவிழாவை (புத்த பூர்ணிமா) மக்கள் கொண்டாடவில்லை. 'ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து, உடுத்திய உடையுடன் தவித்து வரும் நிலையில், விசாக திருவிழாவை கொண்டாடும் பணத்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக வழங்க வேண்டும்’ என புத்த துறவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
**************************
இலங்கைக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படுவது குறித்து யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் என்.நடராஜன் 'தி இந்து'விடம் கூறியது:
"இந்தியா சார்பாக கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சுகன்யா மற்றும் ஐ.என்.எஸ் சுற்லேஜ் என்ற போர்க் கப்பல்கள் மூலமாக குடிநீர், உணவுப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன.
மேலும், சென்னையில் இருந்து இந்திய விமானப்படையின் போயிங் சி-17 விமானம் மூலமும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு, மருத்துவ உபகரணங்கள், தற்காலிக முகாம்கள், அவசரகால விளக்குகள், மொபைல் டாய்லெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வந்துள்ளன. இதனை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சல் ஹர்ஷ டி சில்வா பெற்றுக்கொண்டார்.
மேலும், இலங்கை கேட்டுக் கொள்ளும்பட்சத்தில், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது" என்றார் அவர்.
செய்தி -எஸ். முஹம்மது ராஃபி