உலகம்

தீவிரவாதத்தில் ஈடுபட்டால் குடிமக்களை கொல்வது சரிதான்- அமெரிக்க அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி கொல்வதில் தவறில்லை என்று அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

அல்-காய்தா தீவிரவாதி களுக்கு எதிரான சட்டத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க குடிமகனான அன்வர் அல் அவ்லாகி, சமீர் கான், அப்துல் ரஹ்மான் அல்-அவ்லாகி ஆகியோர் 2011 செப்டம்பரில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதில் அன்வர் அல் அவ்லாகி வடக்கு விர்ஜீனியா மாகாண மசூதியில் பணியாற்றியவர்.

இவரது மகன் அப்துல் ரஹ்மான் அல் அவால்கி, சமீர் கான் அல்-காய்தாவின் இணையதள பத்திரிகையில் பணியாற்றியவர்.

அமெரிக்க குடிமக்களான இவர்களை அமெரிக்க அரசே திட்டமிட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்தது சட்டப்படி சரிதானா, இது தொடர்பாக நீதித்துறை முறையாக விவாதித்து முடிவெடுக்கப்பட்டதா என்று விளக்கம் கேட்டு அமெரிக்க குடிமக்கள் சுதந்திர அமைப்பும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இதையடுத்து ஒபாமா நிர்வாகம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதில் அன்வர் அல் அவலாகி ஓமனில் வைத்து அமெரிக்காவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல கொல்லப்பட்ட மற்ற இருவரும் அல்-காய்தாவுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான்.

அல்-காய்தாவுக்கு எதிரான போருக்காக வகுக்கப்பட்ட சட்டத்தின்படி, எதிரி அமைப்புடன் தொடர்பில் உடையவர்கள் அமெரிக்க குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்ல ராணுவத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT