இராக்கில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பலுஜா நகரை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் அந்த நகருக்குள் நுழைந்துள்ளது. அங்கு இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருவ தாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பலுஜா நகரை மீட்கும் படையின் தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் அப்துல்வஹாப் அல்-சாதி கூறியதாவது:
பலுஜா நகரை மீட்பதற்காக, தீவிரவாத எதிர்ப்புப் படை (சிடிஎஸ்), அன்பர் போலீஸ் மற்றும் இராக் ராணுவம் ஆகியவை கூட்டாக இணைந்து, திங்கள் கிழமை அதிகாலையில் அந்த நகரை நோக்கி மூன்று திசைகளிலும் நகரத் தொடங்கினர்.
இந்த முயற்சிக்கு உதவும் வகையில், அமெரிக்கா தலைமை யிலான நேட்டோ படையினரின் ஒத்துழைப்போடு இராக் விமானப்படை மற்றும் ராணுவ விமானங்கள் வான் வழியாக சுற்றி வளைத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிடிஎஸ் செய்தித் தொடர்பாளர் சபா அல்-நோர்மன் கூறும்போது, “கூட்டுப் படையினர் திங்கள்கிழமை அதிகாலையில் பலுஜா நகரை நோக்கி நகரத் தொடங்கினர்” என்றார்.
இராக்கில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஐஎஸ் தீவிர வாதிகள், பலுஜா மற்றும் மொசுல் ஆகிய 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள் ளனர். பலுஜா நகரில் சண்டை நடந்தபோது நூற்றுக்கணக்கா னோர் வெளியேறிவிட்டனர். எனினும், இன்னும் சுமார 50 ஆயிரம் பேர் அங்கு சிக்கி உள்ளனர். எனவே, அவர்களை மனித கேடயமாக தீவிரவாதிகள் பயன்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இராக் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாக்குதலில் 20 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதைச் சுற்றி உள்ள வர்த்தக பகுதிகளைக் குறி வைத்து தீவிரவாதிகள் அடுத் தடுத்து தாக்குதல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ஷாப் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மர்ம நபர் ஒருவர் சோத னைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் பலியாயினர். 14 பேர் காயமடைந்தனர்.
இதுபோல, தார்மியா பகுதியில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித் ததில் 2 போலீஸார் உட்பட 6 பேர் பலியாகினர். 19 பேர் காய மடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாயினர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பலுஜா நகரை மீட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தை திசை திருப்புவதற்காக இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.