உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று வீசிய ஏவுகணைகளால் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. சுமார் 25 பேர் காயமடைந்தனர். படம்: பிடிஐ 
உலகம்

உக்ரைன் மரியுபோல் நகரில் கடும் சண்டை - உருக்கு ஆலையை தகர்த்தது ரஷ்யா

செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 71-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ரஷ்யா அறிவித்தது. எனினும் அந்த நகரில் உள்ள உருக்கு ஆலையில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு நகரத்துக்கு ஒப்பான இந்த ஆலையின் கீழ் பல அடுக்கு பதுங்கு குழிகள் உள்ளன.

உக்ரைன் வீரர்களோடு 1,000 அப்பாவி மக்களும் சிக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் தீவிர முயற்சியால் அவர்களில் 350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் உருக்கு ஆலையில் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து உக்ரைன் வீரர்கள் தப்பி செல்லக்கூடாது என்பதில் ரஷ்ய ராணுவம் உறுதியாக உள்ளது. இதன்காரணமாக மரியுபோல் உருக்கு ஆலையை குறிவைத்து ரஷ்யா ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் உருக்கு ஆலையின் பெரும் பகுதி தகர்க்கப்பட்டது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஐ.நா.வின் வேண்டுகோளை ஏற்று உருக்கு ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன்படி நேற்று காலை 9 மணி முதல் சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

SCROLL FOR NEXT