பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்தது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஒரு மாத காலத்துக்கும் மேல் ஷாங்காய் நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் 10 சதவீத மெட்ரோ ரயில் நிலையங்களும் (சுரங்க ரயில் நிலையங்கள்) பஸ் நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன.
பெய்ஜிங்கில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 158 பஸ் வழித்தடங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பெய் ஜிங்கில் வீடு வீடாக கரோனா பரிசோதனையை சுகாதாரத் துறை ஊழியர்கள் கடந்த சில நாட்களாகத் தொடங்கியுள்ளனர். அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கின் முக்கிய சுற்றுலாத் தலமான பெய்ஜிங் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே, பெய்ஜிங்கில் நேற்று 51 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒரு சில வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. காய்கறி, கனி வகை மார்க்கெட்கள் மட்டுமே திறந்துள்ளன.
ஷாங்காய் நகரில் நேற்று மட்டும் 4,982 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.