டென்மார்க் வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென், கோபென்ஹேகன் நகரில் உள்ள தனது இல்லத்தில் வரவேற்றார். அவர் கடந்த முறை இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி பரிசாக அளித்த ஒடிசாவின் பட்டாசித்ரா ஓவியத்தை தனது வீட்டின் வரவேற்பு அறையில் வைத்திருப்பதை, பிரதமர் மோடிக்கு காண்பித்தார். படம்: பிடிஐ 
உலகம்

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை இன்று சந்தித்து பேசுகிறார் மோடி

செய்திப்பிரிவு

பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸை நேற்று முன்தினம் சந்தித்து வர்த்தக உறவுகள் குறித்து பேசினார். அதன்பின் ஜெர்மனி தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இந்தியர்களுடன் கலந்துரையாடல்

பெர்லின் நகரில் 1,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் மக்களுக்கான பலன்கள் முழுமையாக சென்றடைவதை, தொழில்நுட்பம் மூலம் பாஜக அரசு உறுதி செய்கிறது என்றும் டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால், அதில் 15 பைசாதான் மக்களை சென்றடைகிறது என இனி எந்த பிரதமரும் கூற முடியாது என்று கூறி காங்கிரஸ் ஆட்சியை கிண்டலடித்தார்.

நாட்டில் தற்போது, 68 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

டென்மார்க் பிரதமருடன் சந்திப்பு

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டென்மார்க் சென்ற பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு பிரதமர் மெட்டேஃபிரட்ரிக்சென்-ஐ சந்தித்து பேசினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடலில் காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், திறன் மேம்பாடு, சுகாதாரம், கப்பல் போக்குவரத்து உட்பட பல துறைகளில் இருதரப்பு கூட்டுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் அதிபராக மேக்ரான் கடந்த மாதம் 24-ம் தேதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அங்கும் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் இவர்கள் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது. அதன்பின் இருவரும் கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT