மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வி (56) உட்பட 7 பேர் மீது கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் லக்வி உட்பட 7 பேரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.
கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பை தாக்குதலில் கொல் லப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் (166 பேர்) தனித்தனியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தர விட்டது. இந்நிலையில் தனித்தனி யாக குற்றச்சாட்டு பதிவு செய்யும் உத்தரவை மாற்றக் கோரி அரசு வழக்கறிஞர் தரப்பில் இஸ்லாமா பாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
விசாரணை நீதிமன்ற உத்தரவுபடி தாக்குதலில் பலியான 166 பேருக்காகவும் தனித்தனியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று கண்டிப்புடன் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீவிரவாதி லக்வி கடந்த ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து பாகிஸ்தான் போலீஸார் எவ்வித தகவலையும் வெளியிட மறுத்து வருகின்றனர்.