இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அன்றாடம் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருந்து எரிபொருள் வாங்கிச் செல்கின்றனர்.
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையில் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாடு உள்ளது. இந்நிலையில் சீனா, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் ஐஎம்எப் போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டு வருகிறது.
சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவி வழங்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது. ஐஎம்எஃப் கடன் உதவி கிடைக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்றும் இடைப்பட்ட நாட்களில் நாட்டின் நிலைமையை சமாளிக்க அண்டை நாடுகளின் கடன் உதவியை எதிர்பார்த்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.