புதுடெல்லி: பெரிய பொருளாதார சக்தி கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்த நிச்சயமற்றக் காலங்களில் இங்கிலாந்தின் முக்கியமான பங்காளியாக இருந்து வருகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாதம் 21, 22-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். இந்த நிலையில் தனது இந்திய பயணத்திற்கு முன்பாக, அதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்வாதிகார நாடுகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள நீண்டகால கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன். சர்வாதிகார நாடுகளிடமிருந்து அமைதி மற்றும் செழுமைக்கான அச்சுறுத்தல்களை நாம் சந்திக்கும் போது, ஜனநாயக நாடுகளும் நண்பர்களும் ஒன்றிணைவது இன்றியமையாதது.
பெரிய பொருளாதார சக்தியாகவும் உலகின் பெரிய ஜனநாயக நாடாகவும் இருக்கும் இந்தியா, இந்த நிச்சயமற்ற காலங்களில் இங்கிலாந்திற்கு முக்கியமான பங்காளியாக உள்ளது. எனது இந்திய பயணம் இரு நாட்டு மக்களுக்கும் வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரை மிகவும் முக்கியமான விஷயங்களை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம், இருநாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) 26 அத்தியாயங்களில் நான்கு அத்தியாயங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும்.
பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் இந்த பேச்சுவார்த்தைகளை மதிப்பாய்வு செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் அனைத்து சாத்தியங்களையும் செயல்படுத்துவதற்கான முயற்சியை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.