தீவிரவாதம் என்பது ஏதோ ஒரு நாட்டுடன் தொடர்புடையது, எங்களுக்கு அதில் தொடர்பில்லை என்ற கொள்கையை உலக நாடுகள் கைவிட்டு ஓரணியில் திரள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் 4-வது அணுசக்தி பாதுகாப்பு மாநாடு வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பெல்ஜியம் தலைநகர் பிரஸல் ஸில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலின் மூலம் அணுசக்தி பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
நாம் குகையில் வாழும் ஒரு மனிதனை தேடவில்லை. கம்ப் யூட்டர், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட அதிநவீன சாதனங்களுடன் நகரத் தில் மறைந்திருக்கும் தீவிர வாதியை தேடுகிறோம். இன்றைய தீவிரவாதிகள் 21-ம் நூற்றாண்டின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தீவிரவாதிகளை தேடும் விவ காரத்தில் நாம் இன்றும் பழைய நடைமுறைகளைத்தான் பின்பற்றி வருகிறோம்.
சில நாடுகளுக்கு (பாகிஸ்தான்) அணு ஆயுத கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு உள்ளது. இது உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத் துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலக நாடு களின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
தீவிரவாதிகள் சர்வதேச அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி செயல்படுகின்றனர். ஆனால் நாம், தனிப்பட்ட நாடு என்ற அளவில் மட்டுமே தீவிரவாதத்தை எதிர்கொள்கிறோம்.
அந்த நாட்டின் தீவிரவாதி எங்கள் நாட்டின் தீவிரவாதி இல்லை. தீவிரவாதம் என்பது ஏதோ ஒரு நாட்டுடன் தொடர்புடையது. அதில் எங்களுக்கு தொடர்பில்லை என்ற கொள்கையை உலக நாடுகள் கைவிட்டு ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லிகோ ஆய்வு மைய ஒப்பந்தம்
ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்த லிகோ ஆய்வு மையம் இந்தியாவில் புதிதாக ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லிகோ ஆய்வு மைய விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவில் லிகோ ஆய்வு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.