கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ 70 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.42 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவர் தனது அறக்கட்டளை மூலம் இத்தொகையை வழங்கியுள்ளார். அடுத்த இரு ஆண்டுகளுக்கு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இத்தொகை செலவிடப்படும்.
கடந்த 16-ம் தேதி ‘நமது பெருங்கடல்’ என்ற தலைப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய டிகாப்ரியோ தனது பங்களிப்பாக ரூ.42 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
அவர் பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் உள்ள ‘மகா பவளத் திட்டு’ (கிரேட் பாரியர் ரீப்) அருகே முதன்முறையாக கடலுக்குள் மூழ்கினேன். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மீண்டும் ஆழ்கடலில் மூழ்கினேன். அப்போது ஏராளமான சுற்றுச்சூழல் மாறுபாடுகள் நிகழ்ந்திருப்பதைக் கண்டேன்.
உடோப்பியா அருகே காணப்பட்ட பவளப்பாறைகள் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் போல இருந்தன. தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவதும், துணிச்சலான அரசியல்தலைமையும்தான் நமது இப்போதைய தேவை. இப்போது நாம் கடலைப் பாதுகாக்காவிட்டால் சுறாக்களும் டால்பின்களும் மட்டும் பாதிக்கப் படப்போவதில்லை.
நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.