உலகம்

அல்ஜஸீரா நிருபர்கள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை: எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

முன்னாள் அதிபர் மோர்ஸிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதற்காக, அல்ஜஸீரா பத்திரிகையின் நிருபர்கள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெளிநாட்டின் பிரபல ஊடகங்கள் தங்களது அரசுக்கு எதிராகவும், முன்னாள் அதிபர் முகம்மது மோர்ஸிக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டிய எகிப்து அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக செய்திகளை சேகரிக்க சென்ற சில வெளிநாட்டு நிருபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

கலவரங்கள் குறித்து செய்தி வெளியிட்டது தீவிரவாத செயலுக்கு ஒப்பானது என்று கூறி, அவர்கள் மீது தீவிரவாத செயல்களை ஊக்குவித்தாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இவர்கள் மீதான வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பளித்த கெய்ரோ நீதிமன்றம், பீட்டர் க்ரெஸ்டீ, முகமது ஃபமி, பஹீர் முகமது ஆகிய அல்ஜஸீரா நிருபர்கள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை கெய்ரோ நீதிமன்றம் வழங்கியுள்ளதாக, சமூக ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் இந்தத் தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT