‘‘லஷ்கர் இ தொய்பா, அல் கய்தா உட்பட எல்லா தீவிரவாத இயக்கங்கள் மீதும் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு காப்பகம் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது. அதில், ‘‘பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ.க்கும் ஹக்கானி தீவிரவாத இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிஐஏ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த, ஹக்கானி தீவிரவாதிகளுக்கு 2 லட்சம் டாலரை ஐஎஸ்ஐ கொடுத்துள்ளது. அந்த தாக்குதலில் 7 அமெரிக்க வீரர்கள் பலியாயினர்’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஹக்கானி தீவிரவாதிகளுக்கும் ஐஎஸ்ஐ.க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது. லஷ்கர் இ தொய்பா, அல் கய்தா, ஹக்கானி உட்பட எல்லா தீவிரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.