உலகம்

உக்ரைன் துயரம்: பதுங்கு குழிக்குள் துள்ளி விளையாடும் உக்ரைனிய குழந்தைகள்

செய்திப்பிரிவு

கீவ்: பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்டு வரும் கீவ் நகரின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றின் படிக்கட்டு சரிவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் வீடியோ ஒன்று அனைவரையும் துயரடையச் செய்துள்ளது.

அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல், 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தாக்குதல் குறித்தும், அதன் கோர விளைவுகள் குறித்தும் உக்ரைனில் இருந்து வெளியாகும் படங்கள், வீடியோக்கள் அனைத்தும் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

சிவில் உரிமைகளுக்கான மையத்தின் உக்ரைன் தலைவர் ஒலெக்ஸாண்ட்ரா மட்விச்சு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக உக்ரைனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், அங்குள்ள மக்களால் பதுங்கு குழிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலெக்ஸாண்ட்ரா பகிர்ந்துள்ள வீடியோ அப்படியான பதுங்கு குழியாக செயல்பட்டு வரும் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையத்தில் பதுங்கி உள்ள குழந்தைகள் அங்குள்ள சாய்வான பிளாட்பாரம் ஒன்றினை ஸ்லைடாகப் பயன்படுத்தி சறுக்கி விளையாடுகின்றனர். பதுங்கு குழியில் இருந்தபோதிலும் வாழ்க்கையில் சின்ன விஷயங்களிலும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவதை இந்த வீடியோ காட்டுகிறது.

இந்த வீடியோ பல நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்த வீடியோவிற்கு பின்னுட்டமாக பலர் போரின் பயனற்ற தன்மையினை பற்றியும், சமூகத்தில் வசதியானமக்களின் வாழ்க்கையை பற்றியும் பதிவிட்டுள்ளனர்.

பயனர் ஒருவர் தனது பின்னுட்டத்தில், "அமெரிக்காவில் பல குழந்தைகளுக்கு எல்லாமும் இருக்கிறது. இருந்தும் அவர்கள் சலிப்பாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த உக்ரைனிய குழந்தைகள் பதுங்கு குழியில் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் பார்க்கக்கூடும். விளையாடுவதற்கு உங்களுக்கும் அதிகம் தேவை இருப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT