பீஜிங்: சீனாவில் 133 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு விவரம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும், இந்த விபத்து சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் உஸோ நகரின் வெளியே நடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து பகுதிக்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் காட்டுத் தீயும் பரவியுள்ளதால் மீட்புப் பணிகளை சீன அரசு திட்டமிட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான விமானம் 6 வருடங்கள் பழமையானது. விமானத்தில் இருந்த 133 பேரில் 123 பேர் பயணிகள் மீதமுள்ளவர்கள் பைலட் விமான சிப்பந்திகள். உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.11 மணியளவில் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து விமான புறப்பட்டது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகியது என சீனாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 44 பேர் இறந்தனர்.
பங்குச்சந்தையில் சரிவு.. இந்த விபத்து காரணமாக போயிங் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையில் 6.8% சரிந்துள்ளன. சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தையிலும், ஹாங்காங் பங்குச்சந்தையிலும் போயிங் விமான பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
விபத்தை நேரில் பார்த்த மலை கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சீன ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், "விமானம் கீழே விழுந்தவுடன் பயங்கர சத்தம் கேட்டது. அது துண்டு துண்டாக சிதறிவிட்டது. அதிலிருந்து கிளம்பிய நெருப்பால் மலையில் தீ பரவியுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், சீன ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தை கறுப்பு, வெள்ளை நிறத்தில் மாற்றியுள்ளது. விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் இணையதளம் கறுப்பு, வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.
விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.மேலும் விரிவான விசாரணைக்கும் சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.