எலான் மஸ்க் (இடது), புதின் (வலது), செச்சன் தலைவர் ரம்ஸான் காடிரோவ் (நடுவில்) 
உலகம்

வம்பிழுத்த செச்சன் தலைவர்; ட்விட்டரில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

செய்திப்பிரிவு

புதினை நேருக்கு நேர் மோத அழைத்த எலான் மஸ்கை எள்ளி நகையாடிய செச்சன் தலைவருக்கு பெயரை மாற்றி பதிலடி கொடுத்துள்ளார் தொழிலதிபர் எலான் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் மூண்டபின்னர் உக்ரைனில் இணைய சேவை முடக்க தனது ஸ்டார் லிங்க் இணைய சேவை நிறுவனம் மூலம் உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவிக்கரம் நீட்டினார்.

இந்நிலையில் அண்மையில் எலான் மஸ்க் ஒரு ட்வீட்டில், ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுத்திருந்தார். இந்த சவால் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்களை உருவாக்கியது. இந்நிலையில் புதினின் ஆதரவாளரும் செச்சன்ய குடியரசின் தலைவருமான ரம்ஸான் காடிரோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் எலான் மஸ்க்கை ஏகத்துக்கும் எள்ளி நகையாடி பதிவிட்டிருந்தார்.

அதில் அவர், "நீங்கள் உங்களை புதினுடன் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். பலவீனமான உங்களை புதின் எளிதில் வீழ்த்துவார். ஒருவேளே உங்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டால் செச்சன் குடியரசுக்கு வாங்கள். இங்குள்ள பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறோம். ஏன் நீங்கள் ரஷ்யாவின் சிறப்புப் படை பல்கலைக்கழகத்தில் கூட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெறலாம். இந்தப் பயிற்சிகளுக்குப் பின்னர் நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பும்போது முற்றிலும் வேறு நபராக உணர்வீர்கள், எலானா (எலான் என்பதின் பெண்பால் பெயர் போல்)" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரம்ஸானின் இந்த டெலிகிராம் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் எலான் மஸ்க். அதில் அவர், "வாய்ப்புக்கும் ஆலோசனைக்கும் நன்றி. சிறப்பாக பயிற்சி பெற்றால் பலன் எனக்கே. ஒருவேளை புதின் சண்டைக்கு பயப்படலாம். நான் அப்போது எனது இடது கையை மட்டும் பயன்படுத்துவேன்" என்று பதிவிட்டு கூடவே எலானா என்றும் தன்னையே அவர் வருணித்துக் கொண்டு அந்த ட்வீட்டை முடித்திருந்தார். (கிண்டல் தொனியில்).

இந்நிலையில் ட்விட்டராட்டி ஒருவர் எலான் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்ததோடு நீங்கள் ஏன் ட்விட்டரில் எலானா மஸ்க் என்றே பெயரை மாற்றிக் கொள்ளக்கூடாது எனக் கேட்க வேடிக்கைக்கு இசைவு தெரிவித்து ட்விட்டரில் தனது பெயரை சிறிது நேரம் எலானா மஸ்க் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 22வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் செச்சன் தலைவரும், பெரும் பணக்காரரும் போரை வைத்து ட்விட்டரில் நடத்திக் கொண்டுள்ள வார்த்தைப் போர் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT