ஈக்வடாரில் ஏற்பட்ட நிலநடுக் கத்துக்குப் பிறகு சுமார் 1,700 பேரைக் காணவில்லை என்றும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் காரணமாக, பெடர்னலெஸ் மற்றும் மன்ட்டா உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்கும் பணியில் ராணுவமும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மீட்புக் குழுவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீட்புப் பணியில் மோப்ப நாய்கள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 525 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 4,605 பேரை காயங் களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், மேலும் பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் களின் உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து ஈக்வடார் உள் துறை அமைச்சர் டியாகோ பியூன்ட்ஸ் கூறும்போது, “நிலநடுக்கத்துக்குப் பிறகு 2,000 பேரைக் காணவில்லை என புகார் வந்துள்ளது. இதில் 300 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்ற 1,700 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர் களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.
அந்நாட்டு அதிபர் ரபேல் கோரியா கூறும்போது, “இடிபாடு களில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அதேநேரம், வீடுகளை இழந்தவர் களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப் பட்டு வருகின்றன. தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதனிடையே இந்த நிலநடுக்கத் தால் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் நிலநடுக்கம்
ஈக்வடார் கடற்கரைக்கு அருகே நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. மியூசினி நகருக்கு அருகே பூமிக்கடியில் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இது, ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.