பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த பயணிகள் விமா னத்தை நோக்கி தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். விமானப் பணியாளர்கள் இருவர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 178 பயணிகளுடன் சவுதி அரேபியாவில் இருந்து பெஷாவர் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தது. விமானத்தை தரையிறக்குவதற்காக அதனை பைலட் தாழ்வாக செலுத்தத் தொடங்கினார். அப்போது திடீரென விமானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. விமானத்தின் கடைசி பகுதியை குண்டுகள் துளைத்தன. அப்பகுதியில் அமர்ந் திருந்த பெண் பயணி ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். விமான பணியாளர்கள் இருவரும் காயமடைந்தனர்.
இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொருவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்திருந்தன. அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் மற்ற பயணிகள் உயிர் தப்பினர். விமானத்தின் இன்ஜின், டயர் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு பாய்ந்து இருந்தால் விமானம் வெடித்துச் சிதறியிருக்க வாய்ப்பு உண்டு.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள்தான் இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டுமென்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் போலீஸார் நடத்திய விசாரணையில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. 8 துப்பாக்கி குண்டுகள் விமானத் தின் மீது பாய்ந்துள்ளன. இவை அனைத்தும் ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் ஆகும். இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள் ளனர். தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக ஜூலை 8-ம் தேதி 10 தலிபான் தீவிரவாதிகள் கராச்சி விமான நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 29 பேர் கொல்லப்பட்டனர்.