வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகார பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வரும் மே 6-ம் தேதி ஆளும் கட்சியின் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் மாநாடு என்பதால், உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இதுவரை 4 முறை அணு ஆயுத சோதனையிலும், தொலைதூர ராக்கெட் மற்றும் ஏவுகணை சோதனையிலும் வடகொரியா ஈடுபட்டது. இதனால் அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை அடுத்த 20 ஆண்டுகளுக்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து உள்நாட்டில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் அதிகார பலத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வரும் மே 6-ம் தேதி ஆளும் கட்சியின் மாநாட்டை நடத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
1980-க்கு பின் முதல் முறையாக நடக்கும் மாநாடு என்பதால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி அரசு உயரதிகாரிகளை மாற்றி அதிபர் கிம் ஜாங் உன் தனது தலைமையை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என தென் கொரிய அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த 1980-ல் நடந்த மாநாடு 5 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் இந்த மாநாடு எத்தனை நாட்கள் வரை நீடிக்கும் என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.