வங்கதேசத்தில் ஆங்கிலப் பேராசிரியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ராஜ்ஷாகி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர் ரெசவுல் கரீம் சித்திக்கி. இவர் கடந்த சனிக்கிழமை, அவரது வீட்டுக்கு அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நே்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்குரிய மற்ற நபர்களைத் தேடி வருவதாக துணை காவல் ஆணையர் நஹிதுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “கைது செய்யப்பட்ட மாணவர் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர். அவருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்” என்றார்.சித்திக்கி ராஜ்ஷாகி பல்கைலக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட நான்காவது பேராசிரியர் ஆவார். வங்கதேசத்தில் முற்போக்கு கொள்கையுடைய அறிஞர்கள், வலைப்பதிவு எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.