உக்ரைனிலிருந்து ஆப்ரிக்க மாணவர்கள் வெளியேறிச் செல்ல பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், ரயில் மற்றும் பேருந்துகளில் ஏற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உக்ரைன் ஆலோசனைக் குழு விரைந்துள்ளது. அதேபோல் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் உக்ரைனிலிருந்து வெளி நாட்டு மாணவர்கள் பலரும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இந்த சூழலில், உக்ரைனிலிருந்து தப்பி தங்கள் நாடுகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கபடுவதாக ஆப்பிரிக்க மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்பிரிக்க மாணவர்கள் இன்சைடர் செய்தி இணையத்திடம் கூறும்போது, “ ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார்கள். உக்ரைன் எல்லைக்கு அழைத்துச் செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏறுவதற்கு கறுப்பின மாணவர்கள் தடுக்கப்படுகின்றனர். மேலும் சிலர் மற்ற நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. உக்ரைன் வாசிகளுக்கே அந்நாட்டு அரசு முன்னுரிமை அளிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க மாணவர்கள் நிறத்தின் அடிப்படையில் பாகுப்படுத்தப்படுவதாகவும், போர் நேரத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.