ஈக்வடாரில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6 ஆகப் பதிவானது. தொடர்ந்து நிலஅதிர்வுகள் நேரிட்டு வருவதால் உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 587 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேரை காணவில்லை. 7 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 23 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6.1 ஆக பதிவானது. இந்நிலையில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6 ஆகப் பதிவானது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங் களால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள னர். முகாம்களில் இடம் இல்லா ததால் ஏராளமானோர் சாலை, தெருக்களில் தஞ்சமடைந்துள் ளனர். ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் மற்றும் தென்அமெரிக்க நாடுகள் தொடர்ந்து நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றன. நிதி நிலைமையைச் சமாளிக்க அந்த நாட்டு அரசு பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நெடுஞ்சாலைகளில் குடும்பம் குடும்பாக வரிசையாக நிற்கும் மக்கள் சைகை காட்டி உணவு, தண்ணீர் கோருகின்றனர். நிவாரண முகாம்களில் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
தென்அமெரிக்க நாடுகளில் பரவி வரும் ஜிகா வைரஸ் ஈக்வடாரிலும் கால் பதித்துள்ளது. நிலநடுக்க பகுதிகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் அந்தப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவுகிறது. இதனால் ஈக்வடார் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.