நியூயார்க்: "போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும், உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், "உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போரின் விளைவுகள், உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் பேசும்போது, “போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே... மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பின்னணி: 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில், உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது.