பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷண் யாதவ் மீது தீவிரவாதம், சதிச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக குல்பூஷண் யாதவ் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவின் ‘ரா’ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அவர் மீது தீவிர வாதம், சதிச்செயல் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதாக பாகிஸ்தான் தீவிர வாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் முதல் தகவல் அறிக்கை விவரங் களை வெளியிட அவர்கள் மறுத்து விட்டனர்.
குல்பூஷண் யாதவ் இந்திய கடற்படையில் பணியாற்றினார் என்பதை இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அவர் முன்கூட்டியே பணிஓய்வு பெற்றுவிட்டார், அவருக்கும் இந்திய கடற்படைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் ரா உளவு அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சிறையில் மர்மச் சாவு
இந்தியாவை சேர்ந்த கிருபால் சிங் (50) என்பவர் கடந்த 1992-ல் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்கு சென்றதால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிருபால் சிங் நேற்று மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து சிறை கைதிகளிடம் லாகூர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி யால் துடித்த கிருபால் சிங், உடனடி யாக உயிரிழந்தார் என கைதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லாகூரின் கோட் லாக்பட் சிறை அதிகாரி நபீஸ் அஹமது கூறும்போது, ‘‘அவரது மரணம் இயற்கையானதாகவே தெரிகிறது. உடலில் சித்ரவதை செய்ததற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லை’’ என்றார்.