உலகம்

தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு இராக் வேண்டுகோள்: பாக்தாதை நெருங்குகிறது தீவிரவாத படை

செய்திப்பிரிவு

இராக்கில் பல நகரங்களையும் பெருமளவு நிலப்பரப்பையும் தங்கள் வசம் கைப்பற்றி வேகமாக முன்னேறி வரும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதலை நடத்தும்படி அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது இராக்.

அரசை எதிர்த்து போரிடும் சன்னி பிரிவு தீவிரவாதிகள் 8 நாளாக மின்னல் வேக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பது ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பாகும். தற்போது பாக்தாத் மீதும் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியுள்ளது.

வான்வழி தாக்குதல் நடத்துவதற்கான சூழலை ஒபாமா நிர்வாகம் மறுக்கவில்லை. நிலைமை மேம்பட்டுள்ளதாக இராக் அதிகாரிகள் தெரிவித்தாலும் வடக்கு இராக்கில் உள்ள 3 கிராமங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதல் நடத்தும்படி அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள தகவலை சவூதி அரேபியாவில் நிருபர்களிடம் பேசும்போது உறுதிசெய்தார் வெளியுறவு அமைச்சர் ஹோஷ்யார் ஜெபாரி.

ராணுவம் மூலமாக அணுகுவது மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது என்பதால் அரசியல் தீர்வுக்கும் நாங்கள் முன் வந்துள்ளோம் என்றும் அவர் சொன்னார். 2003-ல் நடந்த படையெடுப்பில் அதிபர் பதவியில் இருந்த சதாம் ஹுசைனை விரட்டி அடித்து சன்னி பிரிவினரின் ஆதிக்க மிக்க ராணுவத்தை கலைத்தது அமெரிக்கா.

அதன் பிறகு இராக் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி கொடுக்கவும் ஆயுதங்கள் வழங்கவும் பல ஆண்டு காலம் கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டது. தற்போது வளைகுடாவுக்கு விமானந்தாங்கி கப்பலை அனுப்பியுள்ள வாஷிங்டன் பாக்தாத்தில் உள்ள தமது தூதரகத்தின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இராக்கில் மீண்டும் மோதலுக்கு திரும்புவதை அமெரிக்கா விரும்பவில்லை என ஒபாமா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலை ஒடுக்கவும் சதித் திட்டங்களை முறியடிக்கவும் தீர்மானம் பூண்டுள்ள இராக் பிரதமர் மாலிகி, உயர் பதவி கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் செயல்படாத தளபதிகளை நீக்கியுள்ளார்.

பிரதமருடன் அமெரிக்க துணை அதிபர் பேச்சு

இராக் பிரதமர் நூரி அல் மாலிகியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் தொடர்பு கொண்டு பேசினார்.இப்போதைய கலவர நிலைமைக்கு முடிவு காண தேசிய அளவில் ஒற்றுமை காண்பது அவசியம் என்று வலியுறுத்தினார். ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் நடத்திடும் சண்டையில் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதி அளித்த, பிடன் தீவிரவாதிகள் முன்னேறி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதித்தார்.

இந்நிலையில் நாட்டு மக்களுடன் சன்னி பிரிவினரை இணைய வைக்க தவறியதற்காக மாலிகியை பதவி நீக்கம் செய்வது பற்றி அமெரிக்கா திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. மாலிகியை கழற்றிவிட்டு இராக்கில் உள்ள கட்சிகள் சேர்ந்து புதிய அரசு அமைக்கலாம் என்பது அமெரிக்காவின் யோசனை என தெரிகிறது.

புதிய அரசில் சன்னி, குர்து பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும்.அப்படி செய்தால் அல் காய்தா இயக்கத்தின் துணைப் பிரிவான ஐஎஸ்ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் அல் ஷாம்)க்கு சன்னி பிரிவினர் ஆதரவு தருவதை தடுக்க முடியும் என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. கடந்த இரு வாரங்களில்

இராக்கில் உள்ள பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர் தீவிரவாதிகள். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT