தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள ராணுவ ஆட்சியால் அங்கிருந்து ஏராளமான கம்போடியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் உரிய ஆவணங்கள் இன்றி தாய்லாந்தில் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் ஆவர். கடந்த ஒரு சில நாள்களில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கம்போடியர்கள் தாய்லாந்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சட்டவிரோதமாக தாய்லாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. இதுவே கம்போடியர்கள் வெளியேற காரணம்.
இதனால் தாய்லாந்து எல்லைப் பகுதியில் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் கம்போடிய தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை என்று தாய்லாந்து ராணுவ அரசு கூறியுள்ளது.
இப்பிரச்னை குறித்து தாய்லாந்துக்கான கம்போடிய தூதர் ஈட் சோபியா, தாய்லாந்து வெளியுறவு அமைச்சரின் செயலர் சிகாசாக் புவாங்கெட்கியோவை சந்தித்துப் பேச இருக்கிறார். கம்போடியாவில் இருந்து வரும் தொழிலாளர்கள் மூலம்தான் தாய்லாந்தில் உடல் உழைப்பு அதிகம் உள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனவே கம்போடியர்கள் சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு வருவதை தாய்லாந்து இதுநாள் வரை அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.