கிரீஸ் நாட்டின் லாவோஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.
உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக கிரீஸ் நாட்டின் தீவுகளில் கரையேறி வரு கின்றனர்.
தீவிரவாத அச்சுறுத்தல், அகதி கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அண்மை காலமாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. துருக்கிக்கும் ஐரோப்பிய ஒன்றி யத்துக்கும் இடையே கடந்த மாதம் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி கிரீஸ் தீவுகளில் கரையேறும் அகதிகள் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கிருந்து சிரியாவைச் சேர்ந்த தகுதியுள்ள அகதிகளை மட்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதற்கு பிரதிபலனாக துருக்கிக்கு பெரும் தொகை அளிக்கப்படும்.
இந்த ஒப்பந்தப்படி கிரீஸ் நாட் டின் லாவோஸ் உள்ளிட்ட தீவு களில் தஞ்சமடைந்துள்ள அகதி கள் வலுக்கட்டாயமாக துருக்கிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் அகதி களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று லாவோஸ் தீவுக்குச் சென்று அங்குள்ள அகதிகளைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து போப் ட்விட் டரில் வெளியிட்டுள்ள பதிவில், அகதி களை வெறும் எண்ணிக்கையாக பார்க்கக்கூடாது. அவர்கள் மனி தர்கள். ஒவ்வொரு அகதிக்கும் பின்னாலும் ஒரு சோகக் கதை உள்ளது. அவர்களை அரவணைப்பது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.
லாவோஸ் முகாமில் உள்ள அகதிகள் ஒருமித்த குரலில் போப்பை வரவேற்று கோஷ மிட்டனர். அப்போது அவர்கள், போப்பாண்டவர்தான் தங்களின் ஒரே நம்பிக்கை என்று கண்ணீர் மல்க கூறினர்.