உலகம்

சவுதி மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

பிடிஐ

சவுதி அரேபியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸை நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, வர்த்தகம், முதலீடு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா விளங்குகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 5-ல் ஒரு பங்கு சவுதியிடமிருந்து இறக்குமதியாகிறது. இத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

முன்னதாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சவுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அடெல் அல்ஜுபீரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சுகாதார அமைச்சர் காலித் ஏ அல் பலி மற்றும் சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவன தலைவர் அரம்கோ ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, சவுதி மற்றும் இந்திய தொழிலதிபர்கள் 30 பேர் கொண்ட குழுவினருடன் மோடி கலந்துரை யாடினார். அப்போது, பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே, சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அந்நாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

கடந்த 7 மாதங்களில் 2-வது முறையாக அந்த நாட்டுக்கு மோடி சென்றுள்ளார். வளைகுடா நாடுகளில் சுமார் 80 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, இந்த நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்

ரியாத்தில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், “மனித சமுதாயத்துக்கு எதிரானது தீவிரவாதம். உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்துடன் தீவிரவாதத்தை இணைக்காமல் அதை பிரித்துப் பார்க்க வேண்டும். தீவிரவாதத்தில் நல்லது, கெட்டது என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு சாதி, சமயம், மதம், வண்ணம் எதுவும் கிடையாது” என்றார்.

SCROLL FOR NEXT