அமேசான்: கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி! இது தான் உலக நாடுகள், மருத்துவ உலகம், உலக சுகாதார நிறுவனம் என எல்லாத் தரப்பிலிருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் அறிவுரை.
இதைப் பின்பற்றி உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன. இஸ்ரேலில் மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் 3வது டோஸ் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏன், நமது தேசத்திலும் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சிறாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அமேசானின் நிலை அப்படியில்லை: ஆனால், தடுப்பூசி செலுத்துவதில் அமேசானின் நிலை அப்படியாக இல்லை. பல கிலோமீட்டர் தூரம் கடினமான பாதைகளைக் கடந்து நடந்து சென்று மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சூழலே நிலவுகிறது.
பிரேசில் நாட்டின் அமேசான் பகுதியில் 24 வயது இளைஞரான டாவி தனது 67 வயது தந்தையைத் தடுப்பூசி செலுத்துவதற்காக முதுகில் தூக்கிச் சென்ற சம்பவம் புகைப்படமாக வெளியாகியுள்ளது. டாவி தனது தந்தையைச் சுமந்த படி பல மணி நேரம் நடந்துள்ளார். அடர்ந்த வனப்பகுதியில் பயணித்தே அவர்கள் தடுப்பூசி முகாம்களை அடைய முடிகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள சரியான வசதி இல்லாததால் அமேசானின் பூர்வக்குடிகள் 853 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஆவணம் தெரிவிக்கின்றது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம் என பூர்வக்குடிகள் உரிமைக் குழு கூறுகிறது. ஒரு பிரேசிலியன் தன்னார்வத் தொண்டு நிறுவனமானது 1000க்கும் மேற்பட்ட பூர்வக்குடிகள் கரோனா தடுப்பூசி கிடைக்காததால் நோய்த் தீவிரமடைந்து இறந்துள்ளனர் என்று கூறியுள்ளது.
டாவியும் அவரது தந்தை வாஹூவும் ஜோயெ (Zo'é ) என்ற பூர்வக்குடியைச் சேர்ந்தவர்கள். இந்த இனத்தில் 325 பேர் மட்டுமே இருக்கின்றனர். அமேசானின் வடக்குப் பகுதியில் பாரா எனும் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் இப்போது கரோனா அச்சுறுத்தலில் சிக்கியுள்ளனர்.
டாக்டர் சொல்லும் கூற்று: இந்தப் புகைப்படத்தை எரிக் ஜென்னிங்ஸ் சிமோஸ் என்ற மருத்துவரே இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி 2021ல் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது. வாஹூவின் மகன் டாவி, 5 முதல் 6 மணி நேரம் தந்தையை முதுகில் தூக்கிச் சென்று தடுப்பூசி முகாமை அடைந்துள்ளார். தந்தை, மகனின் பிணைப்பை இந்தப் புகைப்படம் உணர்த்துவதாக மருத்துவர் சிமோஸ் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். ஒராண்டுக்கு முன்னர் இந்தப் புகைப்படம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பூர்வக்குடிகளுக்கு உணர்த்தவே எடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகைப்படத்தை புத்தாண்டில் தடுப்பூசியின் அவசியத்தைப் புரிய வைக்க இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமேசானில் உள்ள சவால்கள்: பிரேசிலில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியபோது பூர்வக்குடிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு என பிரத்யேகத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜோயெ (Zo'é ) பூர்வக்குடிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் கூட அவர்களின் வசிப்பிடம் சிக்கலானது. பரப்பளவு கணக்கிடப்பட முடியாத அளவுக்கு விசாலமானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு, சிறு குழுக்களாக வசிக்கின்றனர். இதனால், தடுப்பூசி செலுத்துவோர் ஒவ்வொரு இடத்துக்கும் செல்வது சாத்தியமே இல்லை என அரசு கூறுகிறது. அதனாலேயே ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அங்கு அனைத்து மக்களும் வரும்படி ரேடியோ மூலம் தகவல் பகிரப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அரசு கூறியுள்ளது.
"நாங்கள் ஜோயெ (Zo'é ) பூர்வக்குடிகள் கலாச்சாரம், நடைமுறைகளுக்கு மரியாதை கொடுத்து தடுப்பூசி முகாம் நடத்துகிறோம்" என மருத்துவர் சிமோஸ் தெரிவித்துள்ளார்.
படத்தில் இளைஞர் டாவி தூக்கிச் செல்லும் வாஹூ இறந்துவிட்டார். அவரது மறைவுக்குக் காரணம் தெரியவில்லை. டாவி, நலமுடன் உள்ளார். அண்மையில் அவர் மூன்றாவது டோஸ் செலுத்தியுள்ளார்.