உலகம்

கரோனாவை ஃப்ளூ காய்ச்சல் போல் கருத வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஜெனீவா: கரோனா தொற்றை வெறும் ஃப்ளூ காய்ச்சல் போல் கருத வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பரவல் தொடங்கிய நிலையிலேயே பெருந்தொற்று என வகைப்படுத்தப்பட்டது. ஆல்ஃபா, பீட்டா, காமா என உருமாறி டெல்டா,

டெல்டா பிளஸ் வகைகள் உயிர்ப்பலியை அதிகப்படுத்தின. இன்றுவரை டெல்டா வைரஸே உலகளவில் மிகவும் அதிக பாதிப்பை, உயிர்ப்பலியை ஏற்படுத்தும் வைரஸாக உள்ளது. இந்த நிலையில்தான் ஒமைக்ரான் பரவல் ஆரம்பித்தது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் கூட அதன் தாக்கம் குறைவு என்பது இப்போதுவரை கிடைத்துள்ள தரவுகளால் உறுதியாகியுள்ளது.

ஆனால், இதை வைத்தே யாரும் ஒமைக்ரானை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கேஸ் கடந்த திங்கள்கிழமை ஒரு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், இனிமேல் கரோனா பரவலை, ஃப்ளூ பரவல் போல் கையாளப்போகிறோம். கரோனாவின் கடுமையான தன்மை அடங்கிவிட்டது. இனியும் இது பெருந்தொற்று இல்லை உள்ளூர் அளவில் இருக்கும் தொற்று எனக் கருதலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டியே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. "ஒமைக்ரானைப் பொறுத்தவரையில் இன்னும் நமக்குத் தெளிவான புரிதல் இல்லை. வேகமாகப் பரவும் இந்த வைரஸ் எப்படி உருமாறும் என்றும் தெரியவில்லை.

ஆகையால் பெருந்தொற்று முடிந்துவிட்டது என்று சொல்லும் சூழலுக்கு நாம் இன்னும் வரவில்லை" என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான மூத்த அவசரகால அலுலவர் கேத்தரின் ஸ்மால்வுட் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT