உலகம்

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

பூமியை விட 17 மடங்கு எடையும், இரு மடங்கும் அளவும் கொண்ட கடின பாறைகளால் ஆன புதிய வகை கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வியப்பூட்டும் இந்த கண்டுபிடிப் பால் உலகத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானிகளின் கருத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரும் பூமி (மெகா எர்த்) என்று கூறப்படும் இந்த கிரகம் ‘கெப்ளர் -10சி’ என்று பெயரிடப் பட்டுள்ளது. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை 45 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்த கிரகம், ட்ராகோ நட்சத்திர மண்டலத்தில், பூமியில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. முழுவதும் பாறைகள் மற்றும் திடப் பொருள்களால் ஆன இந்த கிரகம், இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கங்களை விட பெரியது. அதனால் இது மிகப்பெரும் பூமி என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தை சுற்றிலும் அடர்த்தியான வாயு மண்டலம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதை கண்டுபிடித்த ஹார்வர்டு – ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மைய விஞ்ஞானி சேவியர் டமஸ்கியூ கூறுகையில், “இந்த கண்டுபிடிப்பு எங்களுக்கு மிகப்பெரிய வியப்பை அளித்தது” என்றார். மற்றொரு விஞ்ஞானி டிமிதார் சசேலவ் கூறுகையில், “ இந்த கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT