லண்டன்: அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த தென்துருவத்தை அடைந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனை படைத்துள்ளார் கேப்டன் ஹர்ப்ரீத் சந்தி.
பிரிட்டனில் பிறந்தவர் ஹர்ப்ரீத் சந்தி (32). இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். உடற்பயிற்சி மருத்துவரான இவர், பிரிட்டன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அண்டார்டிகாவின் தென் துருவத்தை நோக்கி சாகச பயணத்தைத் தொடங்கினார். தனியாகவே 1,127 கிலோ மீட்டர் பயணித்த அவர், கடந்த 3-ம் தேதி தென் துருவத்தை அடைந்தார். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் மற்றும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் வீசும் காற்று ஆகியவற்றை சமாளித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் தென் துருவத்தை அடைந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
தனது 40 நாட்கள் சாகச பயணம் குறித்து ஹர்ப்ரீத் சந்திதனது வலைப்பூவில் (பிளாக்)கூறும்போது, “பனிப்பிரதேசத்தைப் பற்றி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு எதுவுமே தெரியாது. இப்போது இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் தங்கள் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என ஊக்குவிக்க விரும்புகிறேன். அனைவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீங்கள் விரும்பும் எந்த செயலையும் செய்யும் திறன் உங்களிடம் உள்ளது. கண்ணாடி திரையை உடைப்பது மட்டுமல்லாமல் அதை தூள் தூளாக நொறுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.