சான் பிரான்சிஸ் கோவைச் சேர்ந்த ஜியோஃப்ரே வூ, மைக்கேல் பிராண்ட் இருவரும் காபி பிரியர்களுக்கு ஒரு புதிய வழியைக் கண்டுபிடித் திருக்கிறார்கள். இந்த காபியைக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை, வாயில் போட்டுச் சுவைத்தால் போதும். காபி குடித்த திருப்தி வந்துவிடும். ’Go Cube’ என்ற பெயரில் கஃபின் சேர்த்த வில்லைகளாக இந்த காபி கிடைக்கிறது. 35 கலோரி உள்ள இந்த வில்லையைச் சாப்பிட்டால், ½ கப் காபி குடித்ததற்குச் சமமானது. இந்த காபி வில்லைகள் நூறு சதவிகிதம் வீகன் உணவுப் பொருளாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு வில்லையில் 50 மி.கி. கஃபின், 10 மி.கி. வைட்டமின் பி6, 100 மி.கி. எல்-தியானின், 6 கிராம் சர்க்கரை போன்றவை உள்ளன. 3 விதமான சுவைகளில் கிடைக்கின்றன. 4 வில்லைகள் கொண்ட 6 பாக்கெட்களின் விலை 1,400 ரூபாய். ஒரு காபியின் விலை 115 ரூபாய். மிகப் பெரிய கடைகளில் காபி குடிப்பதை விட இது விலை மலிவானது என்கிறார் மைக்கேல். காபி வில்லைகளைப் பரிசோதித்த ஓர் உணவு இதழ், இது பாதுகாப்பானது, இதைச் சாப்பிட்டால் புத்துணர்வு கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது.
இனி காபியைக் குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்!
டென்மார்க்கில் ‘மனித நூலகம்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகங்களைப் படிக்கும்போது திடீரென்று தோன்றும் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காது. ஆனால் ’மனித நூலகம்’ அந்த இடைவெளியை இட்டு நிரப்புகிறது. மனித நூலகத்துக்குச் சென்று, பட்டியலில் இருக்கும் புத்தகங்களைப் பார்க்க வேண்டும். எந்தப் புத்தகத்தைப் படிக்க நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும். பிறகு கதை சொல்லும் அறைக்குள் அனுப்பி வைப்பார்கள். அங்கே ஒரு மனிதர் நீங்கள் விரும்பிய புத்தகத்தைப் படித்துக் காட்டுவதற்கு காத்திருப்பார். ½ மணி நேரத்தில் ஒரு புத்தகத்தைச் சொல்லி முடித்துவிடுவார். இடையில் நிறுத்திக் கேள்விகள் கேட்கலாம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் புத்தகத்தைத் தொடரலாம். நாடோடி கதைகள், இராக் போர், ஒலிம்பிக், சுய வரலாறு என்று பட்டியலில் இருக்கும் எந்தப் புத்தகத்தையும் மனித நூலகம் மூலம் அறிந்துகொள்ள முடியும். 2007-ம் ஆண்டு முதல் ‘வன்முறையைத் தடுப்போம்’ என்ற பெயரில் இயங்கி வந்த தொண்டு நிறுவனம், இந்த மனித நூலகத்தை ஆரம்பித்திருக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம் மனம் விட்டு உரையாடுவதில்லை. அதனால் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் கொண்ட மனித இனத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் இதை ஆரம்பித்திருக்கிறார்கள். மனித நூலகத்தின் முதல் நிகழ்வு கோபென்ஹேகனில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் 50 நாடுகளில் மனித நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் கதை சொல்ல யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வந்து கதை சொல்லலாம். யாருக்குக் கேட்க விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் வந்து கேட்கலாம். புத்தகத்தைப் பார்ப்பதற்குப் பதில், கதை சொல்பவரின் வாயைப் பார்க்கப் போகிறீர்கள், வேறு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்கிறார்கள் இந்த அமைப்பினர். முன்முடிவோடு கேட்கப்படும் கேள்விகள், குதர்க்கமான கேள்விகள்தான் இந்த மனித நூலகத்தின் மிகப் பெரிய சவால்.
அட, வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இந்த மனித நூலகம்!