காபூல்: 3000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டி அந்த வீடியோவை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது தலிபான் அமைப்பு. தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியா ஷாரியா சட்டத்தின்படியே ஆட்சி நடக்கும் என அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை இயக்குநரகம் சார்பில் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டில் இடம்பெற்றுள்ள வீடியோவில் பெரிய பீப்பாய்களில் இருந்து மதுபானம் கால்வாயில் கொட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் முஸ்லிம்கள் மதுபானத்தை தயாரிக்க, விற்க, அருந்தக் கூடாது எனப் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ரெய்டு எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியின்போதும் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், போதைப் பழக்கம் உடையவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது.