சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்கக் குழு (USCIRF) உறுப்பினர்களுக்கு விசா அளிக்க இந்தியா 7-வது ஆண்டாக மறுத்துள்ளதை அடுத்து அமெரிக்கா இந்திய அரசு மீது கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மதச் சுதந்திர அமெரிக்க ஆணைய உறுப்பினர்கள் மார்ச் 4-ம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்தியா அவர்களுக்கு விசா அளிக்க மறுத்துள்ளது. அதாவது மதச்சுதந்திர விவகாரத்தில் இந்த அமைப்புக்கு தலையீட்டுரிமை கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்தியக் கொள்கையில் இது குறித்து எந்த வித மாற்றமும் இல்லை. அரசியல் சாசன ரீதியாக காக்கப்படும் இந்திய மக்களின் உரிமைகள் விவகாரத்தில் இத்தகைய அமெரிக்க அமைப்பு தீர்ப்பு வழங்குவதற்கான தலையீட்டுரிமை இல்லை என்று விசா மறுத்துள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம். இந்தியாவில் மதச்சுதந்திரம் என்பது இருநாடுகளுக்கிடையே நடைபெறும் உரையாடலில் ஒரு பகுதியே. இந்தியாவுடன் இது குறித்து பேச எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை.
நாங்கள் இந்த சர்வதேச மதச்சுதந்திர ஆணையத்தை ஆதரிக்கிறோம். உலகம் முழுதும் மதச்சுதந்திரம் பேணிகாக்கப்படுகிறதா என்பது பற்றிய தரவுகளையும், சூழ்நிலைகளையும் ஆய்வு செய்வது மிக முக்கியமானது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த அதிபர் ஒபாமாவும் இந்தியாவில் மதச்சுதந்திரம் மற்றும் பன்முகப் பண்பாட்டை பேணிகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஒவ்வொரு நபரும் தங்களுக்குப் பிடித்த மதத்தை வாழ உரிமை அல்லது எந்த மதத்தையும் அனுசரிக்காததற்கான உரிமை அளிக்கப்பட்டால், அதாவது பாகுபாடு, அடக்குமுறை அச்சங்கள் இல்லாத வகையில் உரிமை அளிக்கப்பட்டால் நம் நாடுகள் வலுவாகத் திகழும் என்று ஒபாமா கூறினார்
ஆனால் விசா மறுப்பு குறித்த அரசுத் தரப்பு வாதங்களை நான் இன்னமும் அவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை, ஆனால் இந்தியாவுடன் இது குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.
இந்திய அரசியல் சாசனத்தின் புனிதமாக கருதப்படும் மதச்சுதந்திரம் என்ற விவகாரத்தில் அமெரிக்கக் குழுவினருக்கு தலையீட்டுரிமை இல்லை என்று இந்திய அரசு தெரிவித்தது குறித்து கிர்பியிடம் கேட்ட போது, “ஆம்! மதச்சுதந்திரம் பற்றி அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளது காக்கப்பட வேண்டும், அது கடைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்களும் வலியுறுத்துகிறோம். எது எப்படியிருந்தாலும் விசா மறுப்பு செய்தி எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.