உலகம்

உ.பி.யில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: ஐ.நா. சபை கண்டனம்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தைச் சேர்ந்த இரு தலித் சிறுமிகள், கடந்த மே 27-ம் தேதி திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றபோது கடத்திச் செல்லப் பட்டனர். இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அடுத்த நாள் அவர்களின் சடலத்தை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றது. இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஐ.நா. சபையும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான ஒருங் கிணைப்பாளர் லிசே கிராண்ட் கூறுகையில், "கொல்லப்பட்ட இரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும், இதே போன்ற துயரத்தைச் சந்தித்த கிராமப்புற பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்க ளுக்கு எதிரான வன்முறை என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச் சினை மட்டுமல்ல. அது மனித உரிமை பிரச்சினையாகும்." என்றார்.

சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் பெண்கள் பிரதிநிதி ரெபேக்கா டவாரஸ் கூறுகையில், "பெண்க ளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது தான் ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த அனைவரும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே சமயம், அவற்றை முறைப்படி அமல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கழிவறை வசதி தேவை

ஐ.நாவின் குழந்தைகள் நிதி யத்தின் இந்தியப் பிரதிநிதி லூயிஸ் ஜார்ஜ் அர்செனால்ட் கூறுகையில், "இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 65 சதவீதம் பேர் கழிவறை வசதியில்லாததால், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் காரண மாக அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது" என்றார்.

பான் கி-மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் கூறுகையில், "பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளன. உலக மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்கள், சுரண்டலையும் பாகுபாட்டையும் சந்தித்து வரும் நிலையில் அமைதியும் செழிப்பும் ஏற்பட சாத்தியமில்லை" என்றார்.

SCROLL FOR NEXT