ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, புல்லட் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில்  காத்திருக்கும் பொதுமக்கள்.

 
உலகம்

ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மோகன் கணபதி

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இன்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தை அடுத்து குஜி துறைமுகத்தில் 80 சென்டி மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) மாலை 4.53 மணிக்கு ஜப்பானின் மியோகோவுக்கு 100 கிலோ மீட்டர் கிழக்கு - வட கிழக்கே 7.5 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானிய நில அதிர்வு அளவுகோல்படி அதிகபட்ச உயர் அளவு 7 எனும் நிலையில், இந்த நிலநடுக்கத்தின் அளவு 5 ஆக பதிவாகி உள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆரம்பத்தில் 7.4 ஆக மதிப்பிடப்பட்டாலும் பின்னர் அது 7.5 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதே அளவிலான நிலநடுக்கங்கள் ஒரு வாரத்துக்கு ஏற்படக்கூடும். இந்த நிலநடுக்கம் காரணமாக ஹொக்கைடோ, அமோரி, இவாடே மாகாணங்களின் பசுபிக் கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி அலைகள் உடனடியாக வரக்கூடும்” என தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, அமோரி மற்றும் மியாகி மாகாணங்களில் உள்ள ஹிகாஷிடோரி மற்றும் ஒனாகவா அணுமின் நிலையங்களிலும், புகுஷிமா மாகாணத்தில் உள்ள புகுஷிமா டாய்ச்சி மற்றும் டைனி அணுமின் நிலையங்களிலும் எந்த அசாதாரண நிகழ்வுகளும் பதிவாகவில்லை என அவற்றின் இயக்குநர்கள் தெரிவித்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறினார். டோக்கியோ மற்றும் ஷின்அமோரி நிலையங்களுக்கு இடையேயான டோஹோகு புல்லட் ரயில் சேவைகளை நிறுத்திவைத்துள்ளதாக ஜே.ஆர். ஈஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT