இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண யோசனைகளை தெரிவிக்குமாறு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அணுகியுள்ளது இலங்கை தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மக்கள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கான உரிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தமாத இறுதி வரை அவை செயல்பாட்டில் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண 1957 முதலே பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அவற்றால் எந்த பலனும் விளையவில்லை என்று நிருபர்களிடம் யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை பேசிய பிரேமச்சந்திரன் கூறினார். பிரிட்டனிடம் இருந்து 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக தமிழர்கள் காலம் காலமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தீர்வுக்கான ஆலோசனைகளை இ மெயில் மூலமாகவோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்தோ பொதுமக்கள், கட்சித்தலைவர்கள், அரசியல் ஆர்வலர்கள், புலம்பெயர்ந்தோர் உள்பட அனைத்துத்தரப்பாரும் தெரிவிக்கலாம்.
பெரும்பான்மை சிங்களர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் கூட தமது யோசனைகளை வழங்கலாம் என்றார் பிரேமச்சந்திரன். அரசமைப்புச்சட்ட 13-வது திருத்தத்தை முழுமையாக இலங்கை அமல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என கடந்த மாதம் தன்னை சந்தித்த அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிலையில் பொதுமக்களின் யோசனைகளை வரவேற்றுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. போலீஸ் அதிகாரம் மற்றும் நில அதிகாரங்களை வடக்கு மாகாண கவுன்சிலுக்கு கொடுக்க முடியாது என இலங்கை கைவிரித்து விட்டது. போலீஸ் அதிகாரத்தை மாகாண கவுன்சில்களுக்கு வழங்க முடியாது என்பதை நரேந்திர மோடியை சந்தித்தபோது ராஜபக்சே கூறிவிட்டார் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்டார் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
மாகாணங்களுக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்கலாம் என்பதை நாடாளுமன்ற தேர்வுக் குழு முடிவு செய்யட்டும் என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால் தேர்வுக் குழுவிடம் ஒப்படைப்பது தாமதப்படுத்தும் தந்திரம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகிக்கிறது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா நேரடியாக தலையிட்டதன் காரணமாக 1987ல் இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.