உலகம்

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை

செய்திப்பிரிவு

சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளின் போதகர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் மசூதிகள் இந்த குழுக்களுக்கு எதிராக மக்களை எச்சரிக்க அடுத்த வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்க வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி மசூதிகளின் போதகர்கள் பிரகடனம் செய்ய வேண்டும். அந்த அமைப்பினர் வேறுவிதமாகக் கூறினாலும் அந்த அமைப்பு பயங்கரவாத்தின் வாயில்களில் ஒன்றாகும். அவர்களின் முக்கியத் தவறுகளை விளக்க வேண்டும். சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை குறிப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாத் அமைப்பு 1926-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. நம்பிக்கையை பரப்புவதற்கான சங்கம் என்பது இதன் பொருளாகும். ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் போன்றவற்றில் மதரீதியாக கடைப்பிடிக்க வேண்டும் என முஸ்லிம்களை இந்த அமைப்பு வலியுறுத்துகிறது. உலகம் முழுவதிலும் இந்த அமைப்புக்கு சுமார் 40 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT