உலகம்

ஒமைக்ரான் பாதிப்பு முதல் மூன்று அலைகளைவிட குறைவுதான்: தென் ஆப்பிரிக்கா

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் பாதிப்பு முதல் மூன்று அலைகளைவிட குறைவுதான் என்று தென் ஆப்பிரிக்காவின் பிரபல மருத்துவமனையான நெட் கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் கூட அதன் தாக்கம் மிகமிக குறைவாக இருப்பதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் நாட்டில் கரோனா 4வது அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பாதித்தோருக்கு சிகிச்சை அளித்து வரும் நெட்கேர் மருத்துவமனை, தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் நோயாளிகள் பற்றி வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:

முதல் மூன்று அலைகளின் போது மருத்துவமனையில் ஏராளாமானோர் சிகிச்சைக்கு அனுமதியாகினர். அப்போது கரோனா சமூகப் பரவலாகியிருந்தது.

ஆனால், இப்போது கரோனா ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 90% பேருக்கு ஆக்சிஜன் தெரபி தேவைப்படவில்லை. இப்போது நெட்கேர் மருத்துவமனையில் 337 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சொற்பமான அளவிலானோருக்கே ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் நெட்கேர் மருத்துவமனையில் அனுமதியானவர்களில் 75% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள். இவர்களில் உயிரிழந்த 4 பேரும் 58 வயது முதல் 91 வயது உடைய இணை நோய் கொண்டவர்கள். ஆதலால் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருக்கிறது.
இருப்பினும் இது ஆரம்ப கால நிலையே. ஒமைக்ரானின் பாதிப்பின் வீரியத்தை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT