குழந்தைகள் முன்னேற்றத்தில் கரோனா கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
குழந்தைகளில் கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா கூறியதாவது:
யுனிசெப்பின் 75 ஆண்டு கால வரலாற்றில் கரோனா பெருந்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினியால் வாடும் குழந்தைகள், பள்ளிகளில் இடைநிற்றலான குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள், திருமணத்தில் தள்ளப்பட்ட குழந்தைகள், சரியான சுகாதார வசதிகள் கிடைக்காத குழந்தைகள் என எண்ணற்ற இன்னல்களை குழந்தைகள் இந்த பெருந்தொற்று காலத்தில் சந்தித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் 100 மில்லியன் குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். 60 மில்லியன் குழந்தைகள் ஏழ்மையான குடும்பச் சூழலில் சிக்கியுள்ளனர். 23 மில்லியன் குழந்தைகள் அத்தியாவசியத் தடுப்பூசிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கரோனாவுக்கு முன்னதாக உலகம் முழுவதும் ஒரு பில்லியன் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடிநீர் என ஏதேனும் ஒரு அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வந்தனர். இப்போது கரோனாவுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.