உலகம்

வெறுப்பு கருத்துகளை தடுக்க தவறியதாகக் கூறி 15,000 கோடி டாலர் இழப்பீடு வழங்கக் கோரி பேஸ்புக் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்கு

செய்திப்பிரிவு

மியான்மரில் கடந்த 2017-ல் ராணுவத்தினர் நடத்திய வன்முறையால் 7.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பேஸ்புக்கில் பரப்பப்படும் வெறுப்பு கருத்துகளும் முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனத்திடம் 15,000 கோடி டாலர் இழப்பீடு கேட்டு ரோஹிங்கியா அகதிகள் வழக்கு தொடுத்துளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எடில்சன் பிசி மற்றும் ஃபீல்ட்ஸ் பிஎல்எல்சி ஆகிய இருசட்ட நிறுவனங்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கைப் பதிவு செய்தன.

பேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் பகிரப்படும் தகவல்களை முறையாக கண்காணிப்பதில்லை. அதன் விளைவாக, அவை ரோஹிங்கியா மக்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது என்று அந்த சட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இணையச் சட்டம் பிரிவு 230-ன் படி, சமூக வலைதளத்தில் போடப்படும் பதிவுகளுக்கு அந்த சமூக வலை தள நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக் கூறியுள்ளது.

ஆனால், மியான்மர் சட்டத்தின் அடிப்படையில், பேஸ்புக்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அமெ ரிக்க நீதிமன்றத்தில் வெளிநாட்டு சட்ட விதிகளை சில குறிப்பிட்ட வழக்குகளுக்கு நடைமுறைப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

வன்முறை நிகழ்வுகளுக்கு பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல்கள் முக்கிய காரணமாக உள்ளது என்று 2018-ல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT