பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், 3 மாதங்களாக சம்பளமில்லால் நாங்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளோம், எங்களுக்கு வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு ட்விட்டர் மூலமாக செர்பியாவில் பணியாற்றும் தூதரக ஊழியர்கள் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியாக பாகிஸ்தானின் ரூபாய் உள்ளது.
சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா சென்ற இம்ரான் கான் சொகுசு ஓட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் அறையில் தங்கி சிக்கனத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இன்னமும் பொருளாதார நிலை மாறவில்லை. இந்தநிலையில் செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கானுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முந்தைய வரலாற்று சாதனைகளை உடைக்கும் அளவிற்கு, பணவீக்கம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்.
நாங்கள் அமைதியாக இருந்து உங்களுக்காக எவ்வளவு காலம் வேலை பார்ப்போம். இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எப்படி எதிர்பார்க்கிறார். பள்ளி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், எங்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இதற்கு மேலும் நாங்கள் எப்படி பொறுமையாக இருக்க முடியும். மன்னியுங்கள் பிரதமர் இம்ரான் கான், எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் பாகிஸ்தான் தூதரின் வீடியோவையும் இணைந்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் இதுபோன்று அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் தங்கள் கோரிக்கையை பொது வெளியில் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதன் பிறகு ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது.