ஒமைக்ரான் பாதிப்பு டெல்டா வைரஸைவிட மிதமானதாகவே இருப்பதாக, முதன் முதலில் இந்த திரிபு குறித்து அரசுக்கு எச்சரித்து சோதனைக்கு வழிவகுத்த தென் ஆப்பிரிக்க பெண் மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸீ தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு சளி தொந்தரவு, உடல், தசை வலி, மிதமானது முதல் தீவிரமான தலைவலி ஆகியன ஏற்படும். மேலும், இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் தங்களுக்கு வாசனை, சுவையில் குறைபாடு ஏற்பட்டதாகவோ, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவோ கூறவில்லை. அதனால் தான் இது டெல்டாவை விட மிகவும் லேசானது என்று கூறுகிறோம். உயிரிழப்புகளைப் பொருத்தவரையில் டெல்டாவைவிட மிதமானதாகவும், பரவும் தன்மையில் அதைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆனால், இது இப்போதைய போக்கைப் பொருத்தே கூறியுள்ளோம். எதிர்காலத்தில் இதன் போக்கு எப்படி இருக்கும் என்பதைப் பொருத்துப் பார்க்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியவர்கள் மத்தியில் ஒமைக்ரான் மிதமான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்பதையும் இதுவரையிலான போக்கின் அடிப்படையில் கண்டறிந்துள்ளோம். வயது வித்தியாசம், இணை நோய் பாதிப்புகள் ஆகினயவற்றில் எந்த வேறுபாடு இருந்தாலும் கூட தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறது. அதனால், தடுப்பூசி செலுத்தாத இளைஞர்கள் தான் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவிவிட்ட நிலையில் இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.